இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி

இந்திய கடற்படையினருடன் இணைந்து பல்வேறு கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு திரும்பியுள்ளன.

சிறிலங்கா கடற்படையின், ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான, சாகர மற்றும் சுரனிமல ஆகியன கடந்த 6 ஆம் நாள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

நான்கு நாட்கள் பயணமாக கடந்த 8ஆம் நாள் கொச்சி துறைமுகத்தை சென்றடைந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள், அங்கு தரித்து நின்ற போது, இந்திய கடற்படையினருடன் சிறிலங்கா கடற்படையினர் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை பாடசாலை, சமிக்ஞை பாடசாலை, இந்தியக் கடற்படையின் வான் கண்காணிப்பு பிரிவு, தொலைத்தொடர்பு பாடசாலை, சுடும் பயிற்சி பாடசாலை உள்ளிட்டவற்றுக்கும் சிறிலங்கா கடற்படையினர் சென்றிருந்தனர்.

இதன்போது, இந்திய கடற்படையினரால் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் குறித்து, சிறிலங்கா கடற்படை பயிற்சி அதிகாரிகள் கற்றுக் கொள்ளவும், அனுபவங்களைப் பெறவும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

மேலும் இரண்டு நாட்டுக் கடற்படையினரும் பல்வேறு கடற்படை பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பின்னர், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சார்தாவுடன் இணைந்து, சிறிலங்கா கடற்படையின் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டனர்.

இதன்போது, கூட்டாக கப்பல்களை கையாளுதல், சந்தேகத்துக்குரிய கப்பல்களைத் தேடுதல், தொலைத்தொடர்பு சமிக்ஞைகள் உள்ளிட்டவை தொடர்பாக கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்கா போர்க்கப்பல்கள் கடந்த 12ஆம் நாள் கொழும்பு துறைமுகத்துக்கு திரும்பியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!