சரண கோஷம் எழுப்பும் பக்தர்கள்: – பதறும் காவல்துறையினர்

சபரிமலை, பம்பை, நிலக்கல் பகுதிகளில் பக்தர்கள் ஒன்றாகச் சேர்ந்து சரண கோஷம் எழுப்பினாலே, காவல்துறையினர் பதறியடித்தபடி கண்காணிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

`சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. `சபரிமலையின் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும்’ என்று கூறி பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டங்களில் சரண கோஷமிட்டபடியே போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலக்கல் மற்றும் பம்பையில் நேற்று சரணகோஷ போராட்டம் நடத்திய பக்தர்கள் மீது காவல்துறையினர் லத்தி சார்ஜ் நடத்தினர். போராட்டக்காரர்களும் காவல்துறையினரும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர்.

இந்தநிலையில் சபரிமலை, பம்பை, நிலக்கல், இலவங்கல் ஆகிய 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று பந்த் போராட்டத்தை நடத்தி வருகிறது பா.ஜ.க. இதற்கிடையில், சபரிமலை சந்நிதானத்துக்குள் நுழைய முயன்று பாதி வழியில் திரும்பிச் சென்ற பெண் பத்திரிகையாளர் சுஹாசினி ராஜுக்கு எதிராகப் பக்தர்கள் சரணகோஷம் எழுப்பினர். வெளியூர் பக்தர்கள் ஒன்றாகச் சேர்ந்து பக்தியுடன் `சாமியே சரணம் ஐயப்பா’ எனக் கோஷம் எழுபினால் காவல்துறையினர் உடனே அலர்ட்டாகி பக்தர் குழுவின் அருகே சென்று கண்காணிக்கத் தொடங்குகின்றனர். `அவர்கள் போராட்டக்காரர்கள் இல்லை’ என உறுதி செய்த பிறகே நிம்மதி அடைகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!