தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும் – தினகரன்

தூத்துக்குடியைச்சேர்ந்த எட்டு மீனவர்களையும் இலங்கை அரசின் கொடூர சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளர் டி. டி. வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘இலங்கை அரசின் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் தூத்துக்குடியைச் சார்ந்த எட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 26 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌவுனம் காக்கும் பழனிசாமி அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்குபடுத்துதல் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய நிலையிலேயே இது தமிழக மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனை மாநில அரசு மத்திய அரசின் துணைகொண்டு உடனடியாக தடுத்து நிறுத்திடவேண்டும் என்றும் 26.01.2018 அன்று எனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தேன்.

ஆனால், இதுகுறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தற்போது தூத்துக்குடி திரேஷ்புரம், மாப்பிள்ளையூரணி, சுனாமி நகர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் இந்த கொடூரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் இந்திய ரூபா மதிப்பில் 26 இலட்சம் அபராத தொகை அல்லது மூன்று மாதம் சிறை என தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தொடர்ந்து பெரும் சவாலாகவும், நிச்சயமற்ற தன்மையுடனும் வாழும் வாழ்க்கையாக மீனவர்களின் வாழ்க்கை மாறிவிட்ட நிலையில், இயற்கைச் சீற்றங்கள், இருநாட்டு பிரச்சினைகள், பெற்றோல், டீசல் விலை உயர்வு, செவி சாய்க்காத மாநில அரசு என பல்வேறு தாக்குதல்களினால் சிக்குண்டு, நிலைகுலைந்து தொழில் செய்யமுடியாத நிலை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மீனவ சமுதாய மக்களின் வாழ்வில் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகள், தங்கள் கடமையிலிருந்து முற்றிலும் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தச் சட்டம் இலங்கையால் அமுல்படுத்தப்பட்டபோதே இது முழுக்க முழுக்க தமிழக மீனவர்களை குறிவைக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தோம்.

ஆனால் பழனிசாமியின் அரசோ இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இது பெரும் பாதகத்தை தற்போது தமிழக மீனவர்கள் வாழ்வில் ஏற்படுத்திவிட்டது.

மீனவர்கள் பிரச்சினையில் இந்த மெத்தனப் போக்கை பழனிசாமியின் அரசு தொடர்ந்து கடைபிடிக்குமேயானால், அது மீனவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

தங்கள் சுயநலனுத்திற்காக மட்டுமே மத்திய அரசோடு நட்புறவுகொள்ளும் ஆட்சியாளர்கள், தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த எட்டு மீனவர்களையும், மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கை அரசின் இக்கொடூர சட்டப் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்.’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!