கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்: – சவுதி இளவரசர்

சவுதி அரேபிய மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் சவுதி தூதரகத்தில் கடந்த 2-ந் தேதி மாயமான நிலையில், அவர் அங்கேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல், உலக அரங்கை உலுக்கி உள்ளது.

இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மிக மோசமான முறையில் கசோக்கியை கொலை செய்து மூடி மறைத்து விட்டது என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவின் நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்ந்தபோதும் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நடைமுறையில் சவுதி அரேபியாவை ஆளுகிறவர், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான். எனவே கசோக்கி மரணத்துக்கு காரணமான நடவடிக்கைக்கு இறுதி பொறுப்பை அவர்தான் ஏற்க வேண்டும்” என்று கூறினார்.

இது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டிரம்ப் கொடுத்த அழுத்தமாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்து வந்த முகமது பின் சல்மான், இப்போது தனது மவுனத்தை கலைத்துக்கொண்டு வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு முகமது பின் சல்மான் இதுபற்றி கூறும்போது, “கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “கசோக்கி படுகொலையை தொடர்ந்து எழுந்துள்ள பரபரப்பு, சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளை தடம் புரளச்செய்து விட முடியாது” எனவும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!