சிறிலங்காவில் பாரிய அரசியல் குழப்பம் – மகிந்தவின் நியமனம் செல்லுமா?

மகிந்த ராஜபக்சவை சிறிலங்காவின் பிரதமராக இன்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதால், அரசியல் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருப்பது செல்லாது என்றும், ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் பிரதமராகப் பதவி வகிக்கிறார் என்றும், அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டு விட்டதாகவும், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் சிறிலங்கா அதிபர் செயலகம் கூறியுள்ளது.

இதனால், இந்த ஆட்சிமாற்றம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகுமா – யார் இப்போது ஆட்சியில் இருப்பது என்ற குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருக்கிறார் என்றும், அரசியலமைப்பு ரீதியாக அவரை அகற்ற முடியாது என்றும், ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பெரேரா கூறியுள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்காவில் ஒரு பாரிய அரசியல் குழப்ப நிலையும், நிச்சயமற்ற சூழலும் தோன்றியிருக்கிறது.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றுள்ளதை அடுத்து சிறிலங்காவின் தென்பகுதியில் பல இடங்களில் பட்டாசுகள் கொளுத்திக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சிறிலங்காவில் அரசியல் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கு, 2015இல் கொடுக்கப்பட்ட மக்கள் ஆணைக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டார் என்று செயற்பாட்டாளரான, நாலக குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!