ஆதரவு யாருக்கு என்று சர்வதேசம், இந்தியாவுடன் கலந்துரையாடியே முடிவு! – மாவை

?????????????????????????????????????????????????????????
சர்வதேசத்துடனும், இந்தியாவுடனுடம் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார்.

”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடைபெறுவதால் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் விரும்பியிருந்தது. அதற்கமைய பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டு அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சிறுபான்மைக் கட்சிகள் பலவும் ஆதரவை வழங்கி வெற்றி பெற வைத்தனர்.

இதில் தமிழ் மக்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதாவது தீர்மானிக்கும் சக்தியாக தமிழர் தரப்பு அக்காலகட்டத்தில் இருந்தமையால் நல்லாட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கு உதவியிருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாற்றங்கள் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத சூழலில் யாருடனும் பேசாமல் ஜனாதிபதி தனித்தே இத்தகையதொரு முடிவை எடுத்திருக்கின்றார்.

எங்களைப் பொறுத்தவரையில் யார் பிரதமர் என்பதை விட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கின்றது.

“ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30 (1) 34(1) என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று நாங்கள் ராஜபக்ஷவிடமும் ரணில் விக்ரமசிங்கவிடமும் வலியுறுத்துவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. எமது சர்வதேச சமூகத்தின் முடிவுகளைப் பொறுத்தே நாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது குறித்து முடிவெடுப்போம்.கூட்டமைப்பின் ஆதரவு என்பது எமது கோரிக்கைகளை ஏற்று அதற்கான இறுதித் தீர்மானங்களை எடுக்கும் தலைமைத்துவத்தினைப் பொறுத்தே அமையும்.

எனவே இவ்விடயம் தொடர்பாக நாம் சர்வதேச சமூகத்துடனும், இந்தியாவுடனும் கலந்துரையாடியே இறுதி முடிவினை எடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!