தமிழகம் முழுவதும் பரவுகிறது: டெங்கு-பன்றி காய்ச்சலுக்கு 6 பேர் பலி

தமிழகம் முழுவதும் பரவி வருவதால் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 6 பேர் பலியான சம்பவம் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் உயிர் பலியும் ஏற்படுவதால் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

திருநின்றவூர், கோமதிபுரத்தை சேர்ந்தவர் நாதுராம் (38). திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே அடகு கடை நடத்தி வந்தார்.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த வெள்ளிக்கிழமை சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நாதுராம் பரிதாபமாக இறந்தார்.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 11). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

சில நாட்களாக ஐஸ்வர்யா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரது ரத்த மாதிரியை பரிசோதித்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது.

டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும், நிமோனியா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 161 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அருகே உள்ள பெத்தானூரை சேர்ந்தவர் ராஜா (28), லாரி டிரைவர். காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ரத்த பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. பன்றி காய்ச்சலால் தான் அவர் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்த சக்திவேல் மனைவி வாணி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

கடலூர் மஞ்சக்குப்பம் விவேகானந்தா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன்(29). என்ஜினீயர்.

கடந்த 26-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட் டார். அங்கு அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று கோபிநாதன் பரிதாபமாக இறந்தார்.

கடலூர் மாவட்டத்தில் 650 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வியாபாரி முகமது ரபீக் (வயது41) என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 61 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 18 பேரும் என மொத்தம் 81 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஷா. இவருடைய மகன் ரியாஸ் (7). இந்த சிறுவனுக்கு, மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.

உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், ரியாசை அரக்கோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.

தொடர் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை. ரியாசின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டது. அதற்குள், சிறுவன் ரியாஸ் பரிதாபமாக உயிரிழந்தான்.

திருச்சி அரசு மருத்துவ மனையில் புதுக்கோட்டையை சேர்ந்த மங்கையர்க்கரசி என்ற பெண் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு டாக்டர்கள் முதல் கட்ட பரிசோதனை நடத்தினர். ரத்த மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தி கொண்டிருந்த போதே வலிப்பு ஏற்பட்டு மங்கையர்க்கரசி இறந்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சியை சேர்ந் தவர் விவேகானந்தன். இவரது மகன் சரவணன் (வயது 14). 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சரவணன் டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தான். சம்பவத்தன்று வீட்டில் படுத்திருந்த சரவணன் திடீரென கோமாநிலைக்கு சென்றான். இதையடுத்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்அதற்குள் சரவணன் பரிதாபமாக இறந்தான். அவன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிகிறது.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சாந்தினி (வயது 26). 8 மாத கர்ப்பிணி. இவருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சாந்தினி சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சாந்தினி பரிதாபமாக இறந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!