வசந்த சேனநாயக்க ஏமாற்றி விட்டார் – சஜித் அதிர்ச்சி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வசந்த சேனநாயக்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டது குறித்து, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் நேற்றிரவு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த வசந்த சேனநாயக்க, தாம், ஐதேகவின் பிரதமருக்கு மாத்திரமே ஆதரவு அளிப்பேன் என்று கூறியிருந்தார்.

முன்னதாக அவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் சஜித் பிரேமதாச அவரை, சமாதானப்படுத்தி, அலரி மாளிகைக்கு அழைத்து வந்திருந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்றிரவு, மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில், சுற்றுலா மற்றும் வனவாழ் உயிரினங்கள் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தை முடக்க சபாநாயகரின் அனுமதி தேவையில்லை – பீரிஸ்

நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு, சபாநாயகருடன் சிறிலங்கா அதிபர் ஆலோசனை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று, முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு, சிறிலங்கா அதிபருக்கு அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது,

அதுபற்றி அவர், சபாநாயகருடன் ஆலோசனை நடத்த வேண்டிய எந்தக் கடப்பாடும் இல்லை.

2019 மார்ச் 31ஆம் நாள் வரை புதிய அரசாங்கத்தை நடத்துவதற்கான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு, மகிந்த ராஜபக்ச தயார் படுத்தல்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையிலேயே நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!