திங்களன்று நாடாளுமன்றைக் கூட்டுகிறார் மைத்திரி – அழுத்தங்களுக்கு அடிபணிந்தார்

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தை வரும் நொவம்பர் 5ஆம் நாள்- திங்கட்கிழமை – கூட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பாக தனக்கு அறிவித்திருக்கிறார் என, சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச இன்று காலை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் ஆசனத்தை அளிப்பதற்கும், பிரதமருக்கான சிறப்புரிமைகளை வழங்குவதற்கும், சபாநாயகர் கரு ஜெயசூரிய, இணக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் மகிந்த ராஜபக்ச, பிரதமர் ஆசனத்தில் அமருவதற்கு தடையாக இருக்கமாட்டேன் என்று சபாநாயகர் தெரிவித்திருப்பதாக, இன்று காலை அவரது செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

நேற்று சிறிலங்கா அதிபருடன் நடத்திய சந்திப்பின் போது இது தொடர்பான இணக்கம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!