பிரதி அமைச்சர் பதவிக்காக மகிந்தவின் பக்கம் தாவினார் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கட்சி தாவி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இன்று மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு மாகாண) பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர், தம்மையும், மகிந்த ராஜபக்சவையும் சந்திக்க இணங்கியுள்ளதாக, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

ஐதேகவின் நாவின்னவுக்கு முழு அமைச்சர் பதவி

இன்று மாலை, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி நாவின்னவும் அமைச்சராகப் பதவியேற்றார்.

இவருக்கு உள்நாட்டு விவகார, கலாசார விவகார, பிராந்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவருடன் சேர்த்து இதுவரை ஐதேகவின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

பாலிதவுக்கு 500 மில்லியன் ரூபா பேரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், பாலித ரங்க பண்டார இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில், தமக்கு 500 மில்லியன் ரூபாவும், அமைச்சர் பதவியும் தருவதாக மகிந்த ராஜபக்ச தரப்பினால் பேரம் பேசப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், மேலும் பல ஐதேக உறுப்பினர்களுக்கு 500 மில்லியன் ரூபா பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளதாகவும், அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சபாநாயகரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!