பிரதமர் நியமனம் சட்ட ரீதியானது சந்தேகம் இருந்தால் நீதிமன்றை நாடலாம் தயாசிறி ஜயசேகர

ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக முரண்பாடுகளே நிலவிவந்தன. இதனால் நாட்டுக்கு பாரிய பாதகத்தன்மை ஏற்பட்டது. எனவே இக்கட்டான ஒரு கட்டத்தில் ஜனாதிபதி பிரதமரை மாற்றும் முடிவை எடுத்தார். இது சட்டத்திற்கு உட்பட்டே செய்யப்பட்டது. இதில் சட்டப்பிரச்சினை இருப்பதாக யாராவது கருதினால் அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாட முடியும் என்று புதிய திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சர்ச்சை நிலை தொடர்பில் கேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன் முழுவிபரம் வருமாறு:-

கேள்வி: வெள்ளியிரவு நடந்த அரசியல் மாற்றம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த நாட்டில் தேசிய அரசாங்கம் மூன்றரை வருடங்களாக ஆட்சியில் இருந்தது. இதன்போது பாரிய பிரச்சினைகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டன. இவை நாட்டை பின்னடைவுக்கு கொண்டுசென்றன. இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வந்திருக்கின்றார். அதனடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார்.

கேள்வி: அரசியலமைப்பு ரீதியில் இது சரியானது என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்; ஜனாதிபதி சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடியே இந்த தீர்மானத்தை எடுத்தார். இதில் சட்டப்பிரச்சினை இருப்பதாக யாராக கருதினால் அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம். உயர் நீதிமன்றத்தை நாடி சட்டவிளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

கேள்வி: இந்தப் பின்னணியில் 2020 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்?

பதில்: 2020 ஆம் ஆண்டு நடக்கப்போவது தொடர்பில் தற்போது என்னால் எதனையும் கூற முடியாது. ஆனால் நாங்கள் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து இந்த நாட்டில் வெற்றியை நோக்கிப் பயணிப்போம்.

கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு ஒரு தீர்மானம் எடுப்பார் என்று நினைத்தீர்களா?

பதில் : நான் கனவில் கூட நினைக்கவில்லை. எனினும் கடந்த மூன்றரை வருடங்களாகவே ஜனாதிபதி பாரிய அதிருப்தியுடனேயே இருந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகள் தீர்மானங்கள் நாட்டுக்கு நல்லதாக இருக்கவில்லை. எனவே முடிவு இவ்வாறு அமைந்திருக்கின்றது.

கேள்வி: உங்கள் தரப்பினால் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா?

பதில்: நிச்சயமாக பெரும்பான்மையை எங்களால் நிரூபிக்க முடியும். அது இருந்ததால்தான் நாங்கள் இதனை செய்தோம்.

கேள்வி: தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாக கூறப்படுகின்றதே

பதில்: இந்த இடத்தில் தமிழ் பேசும் மக்கள் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது ஐ.தே. க. 106 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் இருந்தது. அதனைவிட குறைந்த ஆசனங்களே எமக்கு இருந்தது. எனினும் பெரும்பான்மையை உருவாக்கி அரசாங்கத்தை அமைத்த மஹிந்தவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். இதில் பெரும்பான்மையை அமைத்துக்கொடுப்பதில் ஜனாதிபதியின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றது.

எனவே மஹிந்த ராஜபக்ஷ முன்னர் போன்று செயற்படமுடியாது. காரணம் அவருக்கான பெரும்பான்மையை மைத்திரிபால சிறிசேனவே பெற்றுக்கொடுக்கவிருக்கின்றார். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனைவருக்கும் சமமான என்ற கொள்கை நீடிக்கும். அவர் தமிழ், முஸ்லிம் மக்களை அரவனைத்தே தனது பயணத்தை முன்னெடுப்பார் அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எனவே தமிழ் பேசும் மக்கள் பயப்படவேண்டிய அவசியமில்லை.

முன்னர் இருந்த அரசாங்கம் போன்று புதிய அரசாங்கம் இருக்காது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் இருப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!