இரத்தக்களறி ஏற்படும் அபாயம் – ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஏஎவ்பிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

இரத்தக்களறியொன்றை தவிர்ப்பதற்கான காலம் குறைவடைந்து வருகின்றது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

அதேவேளை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நம்பிக்கை இழந்த சிலர் இரத்தக்களறியை ஏற்படுத்தக்கூடும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் ஆதரவாளர்களிற்கு வன்முறையில் ஈடுபடவேண்டாம் என வேண்டுகோள் விடுப்போம் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க எனினும் இவ்வாறான சூழ்நிலையில் என்ன நடக்கலாம் என்பதை கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றால் தற்போதைய நெருக்கடி நீண்ட நாட்கள் நீடிக்காது ஆகக்கூடியது பத்து நாட்கள் நீடிக்கும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் ஆதிபத்தியத்தை உறுதி செய்வதே முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன தடைகளை ஏற்படுத்தி வருகின்ற போதிலும் நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு ஜேவிபியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவளித்து வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் சட்டபூர்வமானவையில்லை அரசமைப்பிற்கு முரணானவை என பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவி;க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியுடன் மோதல் வரும் என நான் எதிர்பார்த்தேன் ஆனால் பதவி நீக்கம் நிகழும் என எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதமளவில் பிரச்சினைகள் உருவாகலாம் என நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு முன்னதாக இது இடம்பெற்றுள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!