அவை முதல்வராக தினேஸ் குணவர்த்தன – ஐதேக நிராகரிப்பு

நாடாளுமன்ற அவை முதல்வராக தினேஸ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று அறிவித்திருந்த நிலையில், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே சபை முதல்வராக தினேஸ் குணவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று அறிவித்திருந்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கலம் கொண்ட கட்சியின் சார்பிலேயே அவை முதல்வர் தெரிவு செய்யப்படுவார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னமும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்காமல், அவை முதல்வரை நியமிப்பது செல்லுபடியாகாது என்றும், ஐதேகவின் உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பௌசிக்கும் இராஜாங்க அமைச்சர் பதவி

புதிய அரசாங்கத்தில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏ.எச்.எம்.பௌசி நேற்று இராஜாங்க அமைச்சராகப்ப பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், இவர், தேசிய ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார்.

மைத்திரியின் நியமனம் தவறு – 72 வீதமானோர் கருத்து

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை தவறானது என்று 72 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இணையம் மூலம் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 72 வீதமானோரே இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!