பலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா? – அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களாக உள்ளார்களா? என பொதுநல மனு தாக்கல் செய்த வழக்கறிஞரை நோக்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எம்.எல் சர்மா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

எம்.பி., எம்.எல்.ஏ என அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு அளிக்கும் போது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுக்கின்றனர். உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த பொதுநல மனு நீதிபதிகள் எஸ்.ஏ போப்டே, நாகேஸ்வர ராவ் அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. “அலகாபாத் ஐகோர்ட் உன்னாவ் சம்பவத்தில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் சர்மா நீங்கள் பாதிக்கப்பட்ட நபர் இல்லை. கிரிமினல் சம்பவத்தில் பொதுநல மனுவை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“பல பாலியல் பலாத்கார சம்பவங்களில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடர்பு உள்ளது. ஆனால், போலீசார் எந்த எப்.ஐ.ஆரும் பதிவு செய்யவில்லை. அதிகார தலையீடு அதில் இருக்கிறது” என வழக்கறிஞர் சர்மா வாதிட்டார்.

இதனை கேட்ட நீதிபதி போப்டே, “அத்தனை பாலியல் பலாத்கார வழக்குகளிலும் நீங்கள் யார்?, உங்களது உறவினர்கள் பலாத்காரத்திற்கு ஆளாகி அவர்களுக்காக தீர்வு கேட்கிறீர்களா? அல்லது பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களாக உள்ளனரா?” என திடீரென அதிரடியாக கேள்விகளை எழுப்பினர்.

நீதிபதியின் கேள்வியால் கோர்ட் அறையில் ஒரு சங்கடமான அமைதி நிலவியது. சர்மா தனது வாதங்களை தொடர முற்பட்ட போது, இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!