மாமனார் வீட்டிற்கு தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமாப்பிள்ளை கைது

மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் மாமனார் வீட்டிற்கு தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

அவரை ஓசூர் பகுதியில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த மணி (26) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மணி மீது வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே பள்ளி மாணவியை கடத்தி சென்ற மணி அவரை கோவிலில் வைத்து திருமணம் செய்ததுடன் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி தனிக்குடித்தனம் நடத்திவந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் மணியை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அவரை தீபாவளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மாமானரின் அழைப்பினை ஏற்ற மணி தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பதாசன் காட்டுவளவு பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் தீபாவளி தினமான நேற்று காலை புதுமாப்பிள்ளை மணி மாமனார் வீட்டில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடை அணிந்து தலை தீபாவளியினை கொண்டாட தயாராக இருந்தார்.

அப்போது இளம்பெண்ணை கடத்தி சென்ற மணி வந்திருக்கும் தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் மாமானார் வீட்டில் மகிழ்ச்சிகரமாக தீபாவளி கொண்டாட தயாராக இருந்த மணியை கைது செய்து எடப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

தீபாவளி பண்டிகையினை கொண்டாட அனுமதிக்கும்படியும் பண்டிகை முடிந்து தானே நேரில் வந்து ஆஜராக தயாராக உள்ளதாகவும் மணி போலீசாரிடம் மன்றாடி கேட்டும் போலீசார் கேட்கவில்லை. மணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!