எதிர்க்கட்சி வரிசையில் அமர்வேன் – மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள குமார வெல்கம!

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவேன். மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபித்தாலும் நான் அவரது அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம. கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்-

“மஹிந்தவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக ஆதரவு கொடுத்து நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவேன். பெரும்பான்மையினை நிரூபித்தாலும் நான் அவரது அமைச்சில் அமைச்சர் பதவியினை ஏற்கமாட்டேன். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் தவிர்த்து வந்தேன். ஆனாலும் தற்போதைய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டில் இப்போது இரண்டு பிரதமர்கள். ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் இருக்கிறார். ஒருவர் பிரதமரின் வாசஸ்த்தலமான அலரி மாளிகையில் இருக்கிறார். இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். யார் இவர்களில் சரியான பிரதமர்? மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமைக்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம். எனினும் நாடு முன்னேறிச்செல்ல வேண்டும் என்றால் முதலில் யார் பிரதமர் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

எமது தலைவர் மஹிந்த பிரதமராகியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் இந்த பிரச்சினையை இதனைவிடவும் சிறப்பான வழியில் தீர்த்திருக்க முடியும். இந்த நாட்டிலே அரசியலமைப்பு முறைமை ஒன்று இருக்கிறது. அந்த அரசியலமைப்பிற்கு அமையவே நாம் செயற்படவேண்டும். இல்லை மக்கள் நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவுவேன் என்று சொல்வார்கள்.

நான் ஒருபோதும், கட்சித் தாவமாட்டேன். மஹிந்தவிற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. அதனைக் காண்பித்தால் பிரச்சினைத் தீர்ந்து விடும். நான் எடுக்கும் நிலைப்பாட்டினை நான் முன்னரே அறிவித்து விட்டேன். இந்த இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் போதே நான் இதனைத் தெரிவித்தேன்.

எம்மை பீரிஸின் இல்லத்திற்கு அழைத்து பேசினார்கள். அதன்போது, நான் செயற்பாட்டிற்கு விருப்பம் இல்லை என்று கூறினேன். அத்துடன் பொறுமையாக இருக்கவேண்டும் என்றும் கூறினேன். மஹிந்த பிரதமர் பதவியினை ஏற்பாராயின் நான் அவருக்கு 113 ஆசனத்திற்காக ஆதரவு கொடுப்பேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காகவும், ஆதரவு கொடுப்பேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!