கரு ஜெயசூரிய விரைவில் பதிலளிக்க வேண்டி வரும் – எச்சரித்த மைத்திரி

அரசியலமைப்புக்கு எதிராகச் செயற்பட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய விரைவில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் லக்ஸ்மன் பியதாய தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை தான் கலைக்கப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் உறுதியளித்தார்.

பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதால், முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்காக, முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று சிலர் அச்சமூட்டுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்காக பெருமளவு பணம் வழங்கப்படுகிறது.

ஆனாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ அதனைச் செய்யவில்லை” என்றும் சிறிலங்கா அதிபர் கூறினார் ” எனவும், லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!