சிறிலங்கா நிலவரங்களை உன்னிப்பாக பின்தொடர்கிறோம் – அமெரிக்க உயர் அதிகாரி

நிச்சயமாக சிறிலங்காவின் நிலைமைகளை நாங்கள் மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வருகிறோம் என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் தனது பெயரை வெளியிட விரும்பாத அமெரிக்க அரச உயர் அதிகாரி ஒருவர், சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக, வெளிநாட்டு செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

கொழும்பின் வெளிநாட்டுக் கடன் தொடர்பாக கவலையை வெளிப்படுத்திய அந்த அமெரிக்க அதிகாரி, “முன்னைய அரசாங்கம் அபிவிருத்தி உதவி என்ற பெயரில் பெற்ற கடன்களால் சிறிலங்கா திணறும் நிலையில், தற்போதைய அரசியல் நெருக்கடிகளால் நாங்கள் குழப்பமடைந்துள்ளோம்.

பல திட்டங்களின் வணிக ரீதியான பொறுப்பு தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகளை அமெரிக்கா கண்காணித்து வருகிறது. மிகவும் நெருக்கமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

நாம் பேசும் நாடு பற்றி மட்டுமன்றி பொதுவா நாடுகளைப் பற்றிப் பேசும் போது ஒன்றை கூறுகிறேன். அதிபர் ட்ரம்பின் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் கொள்கையும் சரி, எமது இந்தோ பசுபிக் மூலோபாயமும் சரி, பிராந்தியத்தில் உள்ள எல்லா நாடுகளின் இறைமையைப் பாதுகாப்பதாகும்.

இறைமை என்பது, நாடுகளின் மக்களிடம் உள்ளது. மக்களுக்கு, தமது அரசாங்கங்கள், வெளிநாடுகளுடனும் கடன் வழங்குனர்களுடனும் எத்தகைய உடன்பாடுகளை செய்து கொள்கின்றன என்று அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!