சிறிலங்கா அதிபரின் நடவடிக்கை – பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா அதிர்ச்சி

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றிரவு சிறிலங்கா அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன.

ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட், கீச்சகப் பதிவு ஒன்றில் –

‘சிறிலங்காவின் ஒரு நண்பனாக, அனைத்து தரப்புகளும் அரசியலமைப்பை பின்பற்றுமாறு பிரித்தானியா கோருகிறது.

ஜனநாயக நிறுவனங்களையும், செயல்முறைகளையும் மதித்துச் செயற்படுமாறும் கோருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

கனடா

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள கனடிய வெளிவிவகார அமைச்சு, இது போருக்குப் பிந்திய நல்லிணக்கப் பணிகளை ஆபத்துக்குள்ளாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கனடிய வெளிவிவகாரக் கொள்கையின் கீச்சகப் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவில்,

“அரசியல் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவது, சிறிலங்காவின் ஜனநாயக எதிர்காலத்தையும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளையும் சிதைத்துவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா

அதேவேளை, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பைன், சிறிலங்கா நிலவரம் குறித்து அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் இந்த நடவடிக்கையானது சிறிலங்காவின் நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தை சிதைப்பதாகவும், உறுதிப்பாடு மற்றும் செழிப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!