மெல்பேர்னில் தாக்குதலை மேற்கொண்டவர் ஐஎஸ் ஆதரவாளர்- அவுஸ்திரேலிய பொலிஸார்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் வாயு போத்தல்கள் நிரம்பிய வானை வெடிக்க வைத்ததுடன் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் ஆனால் அந்த அமைப்புடன் நேரடி தொடர்பில்லாதவர் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மெல்பேர்னில் தாக்குதலை மேற்கொண்டவர் 30 வயது ஹசன் ஹலீப் சையர் அலி என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரம் காரணமாக அவர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சையர் அலி சிரியாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்ற புலனாய்வு தகவலை தொடர்ந்து அவரது கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் போது அவர் தீவிரவாத கருத்துக்களை கொண்டிருந்தாலும் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தவற்றவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டு;ள்ளனர்.

அவர் ஐஎஸ் அமைப்பினால் உணர்வூட்டம் பெற்றார் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என தெரிவிப்பதே சரியானதாகும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேரடி தொடர்புகள் இருந்தன என நாங்கள் தெரிவிக்கவில்லை மாறாக அவர் ஐஎஸ் அமைப்பினால் உத்வேகம் பெற்றார் என நாங்கள் கருதுகின்றோம் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் காவல்துறையினரால் சுடப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் அதற்கு முன்னர் வாயு போத்தல்கள் நிரம்பிய தனது காரை வெடிக்க வைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!