சோபித தேரரின் பூதவுடல் மீது செய்த சத்தியத்தை மீறிய மைத்திரி!

தன்னை ஆட்சியில் அமர்த்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சோபித தேரரின் பூதவுடல் மீது செய்த சத்தியத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீறிவிட்டார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், அலரி மாளிகையில் நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.

”19ஆம் திருத்தச்சட்டத்தினை கொண்டுவரும்போது அதில் அதிக கரிசனையுடன் செயற்பட்டவர் மைத்திரிபால சிறிசேனவே. நாம் எல்லோரும் ஒன்றாக இருந்த நேரத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேன் என, சோபித்த தேரரின் பூதவுடல் மீது ஜனாதிபதி மைத்திரி சத்தியம் செய்தார்.

தன்னை அதிகாரக் கதிரையில் அமர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்த உத்தம தேரரின் பூதவுடல் மீது செய்த சத்தியத்தையே இன்று மைத்திரி மீறியுள்ளார். ஒழிப்பதாகக் கூறிய நிறைவேற்று அதிகாரத்தையும் மீறி இல்லாத ஒரு அதிகாரத்தை அவர் பயன்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இல்லாத அதிகாரத்தை மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்தவில்லை. அவர் அரசியலமைப்பினை மாற்றி அதிலுள்ள அதிகாரங்களையே பயன்படுத்தினார். ஆனால் மைத்திரி அரசியலமைப்பில் இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்” எனக் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!