நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக 12 மனுக்கள் – உச்சநீதிமன்றம் ஆராயத் தொடங்கியது

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன், ஐதேக பொதுச்செயலாளர் கபீர் காசிம், ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா, ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க , சட்ட நிபுணர் லால் விஜேநாயக்க, மனோ கணேசன் உள்ளிட்டவர்களினால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில் சிறிலங்கா அதிபர், பிரதமர்,உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையில், பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜெயவர்த்தன ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணைக்கு செய்து வருகிறது.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து ஆராயும் உச்சநீதிமன்றத்தின் அமர்வு பிற்பகல் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!