மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

தாம் பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாமல் குமார் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் படுகொலைச் சதித் திட்டத்தில் முதலில் பாதாள உலகை சேர்ந்தவரையும், காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம்சாட்டிய நாமல் குமார பின்னர், சரத் பொன்சேகாவையும் அதில் தொடர்புபட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்த படுகொலைச் சதியில் தொடர்பிருப்பதாக நாமல் குமார தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மூல காரணியாக இருந்த நாமல் குமார, பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருப்பது, இந்தப் படுகொலைச் சதித் திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!