மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – சட்டமா அதிபர் வாதம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உச்சநீதிமன்றினால் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் பதிலளிக்கக் காலஅவகாசம் கோரியதால் இன்று காலை வரை விசாரணைகளை உச்சநீதிமன்ற அமர்வு நேற்று மாலை நிறுத்தி வைத்தது.

இன்று காலை 10 மணியளவில், சட்டமா அதிபரின் சமர்ப்பிப்புகளுடன் மனுக்கள் தொடர்பான விசாரணை ஆரம்பமானது.

இதன்போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, சட்டபூர்வமானதே என்றும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் சட்டமா அதிபர் வாதிட்டார்.

இதுதொடர்பாக சிறிலங்கா அதிபருக்கு உள்ள அதிகாரங்கள் அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்ட சட்டமா அதிபர், அனைத்து அடிப்படைஉரிமைமீறல் மனுக்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன் சட்டமா அதிபரின் சமர்ப்பிப்புகள் முடிவடைந்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!