ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் – சம்பிக்க

கோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார்.

இச் சம்பவத்தின் காரணமாக நாட்டில் யார் பிரதமர்? என்ற குழப்ப நிலை நிலவி வருகிறது. இதனிடையே ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் “யார் பிரதமர்?” என்ற தலைப்பின் கீழ் சிவில் அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் ஏற்பாட்டில் மாநாடொன்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய சம்பிக்க மேலும் தெரிவித்ததாவது,

“வெளிநாட்டு பிரஜா உரிமையை வைத்துக்கொண்டு சிலர் தேசப்பற்றாளன் என்று கூறுகின்றார்கள். கடந்த காலங்களாக எங்கே கோத்தபாய என்று தேடினேன். அவரைக் கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டது.

ராஜபக்ஷவிற்கு வெளிநாடுகளிலுள்ள சொத்துக்களை முடக்கப்போவதாக கூறியதையடுத்து அமைதியாகி விட்டார். இது தான் அவர்களது தேசப்பற்று.

பயங்கரவாதிகளை நாங்கள் தான் தோற்கடித்தோம் என மார் தட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஒன்று சொல்ல வேண்டும்.

விடுதலைப்புலிகளுடன் போர் நடந்தது. போரின் பின்னர் 1200 ஆக இருந்த புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கையை கோத்தாபய 7000 ஆக அதிகரித்தார்.

நாடு பூராவும் இராணுவ புலனாய்வு உறுப்பினர்களை அனுப்பினார். அதன் பிரதான நிலையமாக கொழும்பு புறக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள ரிபோலியை பயன்படுத்தினார்.

புதிய உற்பத்தி தளமாக ரிபோலி கோத்தாபாயவினால் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் அங்கு தான் அவரது சித்திரவதை முகாம் இருந்தது.

அச் சித்திரவதை முகாமை மூடி மறைக்கவே புதிய உற்பத்தி என்கின்ற தளத்தை அறிமுகப்படுத்தினார்.” எனக் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!