நாடெங்கும் பாதுகாப்பை தீவிரப்படுத்த நள்ளிரவில் உத்தரவு

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நாடு முழுவதும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிலதரப்புகள் குழப்பங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதால், சிறிலங்கா காவல்துறையினரை விழிப்புடன் கண்காணிக்குமாறும், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும், சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

நேற்றிரவு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த அவசர உத்தரவு அனுப்பிவைக்கப்பட்டது.

கட்சிகளின் ஆதரவாளர்கள் குறுகிய நோக்கங்களுக்காக நாசவேலைகளில் ஈடுபடக் கூடும் என்றும், சிறிலங்கா காவல்துறை மா அதிபர் எச்சரித்துள்ளார்.

மக்களின் நாளாந்த வாழ்வு இயல்பான நிலையில் இருப்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமது பகுதியில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிக்கைகளை இரண்டு நாட்களுக்குள் தமக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அதேவேளை, நேற்று மாலை நாடாளுமன்றக் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து, நேற்றிரவு 8 மணியளவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புச் சபையைக் கூட்டி ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபரின் செயலர், பாதுகாப்புச் செயலர், வெளிவிவகாரச் செயலர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், காவல்துறை மா அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!