குழப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் மைத்திரி

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுக் கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேலும் மகிந்த பதவியில் இருக்க முடியாது – சம்பந்தன்

மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர் இனிமேலும் பிரதமராகப் பதவி வகிக்க முடியாது, உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவரது அமைச்சரவை இனிமேலும் பதவியில் இருப்பதற்கு அருகதை இல்லை” என்று தெரிவித்தார்.
(பிற்பகல் 2.55 மணி)

மகிந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது தாம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட அவர், கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா என்ற பிரேரணையை தாம் முன்வைத்ததாக தெரிவித்தார்.
(பிற்பகல் 2.50 மணி)

ஐதேக உறுப்பினர் மீது மிளகாய்த் தூள் வீச்சு

நாடாளுமன்றத்தில் தன் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவு உறுப்பினர்களால், மிளகாய்த் தூய் வீசப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
(பிற்பகல் 2.42 மணி)

நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியது

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இரண்டாவது தடவையாகவும் இன்று நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
(பிற்பகல் 2.30 மணி)

காவல்துறை பாதுகாப்புடன் வந்த சபாநாயகர் மீது தாக்குதல்

காவல்துறையினரின் பாதுகாப்புடன் சபாநாயகர் அவைக்கு வந்த போது ஆளும்கட்சியினர் காவல்துறையினர் மீதும், சபாநாயகர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

மகிந்த அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை அகற்றிக் கொண்டு சென்றதுடன், அவரது மேசையில் இருந்த ஆவணஙங்கள் மற்றும் பொருட்களால், காவல்துறையினர் மீதும், சபாநாயகர் மீதும் தூக்கி வீசினர்.

இந்த நிலையில், சபாநாயகர் ஆசனத்தில் அமராமல், சபை அமர்வை கூட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நிலையியல் கட்டளைகளை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்தார்.

அதற்கு எதிர்க்கட்சியின் ஆதரவு அளித்தனர். இதையடுத்து, பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் அவை 19ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

பெருமளவு காவல்துறையினரின் பாதுகாப்புடன் உள்ளே வந்த சபாநாயகர் மீண்டும் திரும்பிச் சென்றுள்ளார்.

இந்தக் குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, மகிந்த ராஜபக்ச சிரித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
(பிற்பகல் 2.12 மணி)

புதிய நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான புதிய நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இன்றைய அமர்வில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(பிற்பகல் 2.05 மணி)

நாடாளுமன்றில் இறங்கிய ஹெலியால் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் சிறிலங்கா விமானப்படையின் முக்கிய பிரமுகர்களுக்கான உலங்குவானூர்தி ஒன்று வந்து இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலங்குவானூர்தியில் முக்கிய பிரமுகர்கள் எவரும் வந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், யாரும் அதில் வரவில்லை என்று தெரிகிறது.

அவசர மீட்புத் தேவைகளுக்காகவே விமானப்படையின் எம்.ஐ-17 உலங்குவானூர்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(பிற்பகல் 1.59 மணி)

பாலிதவைக் கைது செய்யுமாறு முழக்கம் எழுப்பும் மகிந்த அணி

நாடாளுமன்றத்துக்குள் நேற்று கத்தியுடன் வந்திருந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பாலிய தெவரப்பெருமவைக் கைது செய்யுமாறு ஆளும்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச இன்னமும் அவைக்கு வராத போதும், நாமல் ராஜபக்ச சபா மண்டபத்தில் நிலைமைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.
(பிற்பகல் 1.55 மணி)

சபாநாயகர் ஆசனம் மகிந்த அணியால் ஆக்கிரமிப்பு

நாடாளுமன்றக் கூட்டம் ஆரம்பமாகவிருந்த நிலையில், சபாநாயகரின் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஆக்கிரமித்துள்ளனர்.

சபாநாயகரின் ஆசனத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ அமர்ந்துள்ளதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

இதனால் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
(பிற்பகல் 1.38 மணி)

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு இல்லை

நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் முற்பகல் 11.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

முடிவுகள் ஏதும் எட்டப்படாமல் இந்தக் கூட்டம் முடிவுக்கு வந்தது என்று,தினேஸ் குணவர்த்தன கூறினார்.
(பிற்பகல் 1.34 மணி)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!