சிறிலங்காவில் கடலில் மூழ்கும் தீவு – பேரலைகள் தோன்றக் காரணம் என்ன?

சிறிலங்காவுக்கு அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாலேயே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, உயரமான அலைகள் தோன்றுவதாகவும், சுனாமி ஆபத்து ஏற்படாது என்றும் சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடல் மட்டம் திடீரென அதிகரிப்பதுடன், கடல் அலைகள் உயரமாக மேல் எழும்ப வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் சிறிலங்காவிலும், தமிழ்நாட்டின் தென்பகுதியிலும் பல இடங்களில் கடல் நீர்மட்டம் அதிகரித்து, தரைப்பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது.

உயரமாக எழுந்த பேரலைகளால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதற்கான காரணம் குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஒருவர்,

”நாளை வரை இந்த காலநிலை நீடிக்கும். சிறிலங்காவுக்கு அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாலேயே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, உயரமான அலைகள் தோன்றுகின்றன. இதனால் சுனாமி ஆபத்து ஏற்படாது. கடல் அலைகள் இரண்டரை தொடக்கம் மூன்று மீற்றர் உயரத்துக்கு மேலெழும்பும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கற்பிட்டியில் முதுபந்திய தீவுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இதனால் தீவின் ஒரு பகுதி, பிரதான பகுதியில் இருந்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!