இராணுவத்தினரின் குருதி தமிழரின் உடலில் கலப்பு – ஆளுநர் மீளவும் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் பலரின் குருதியில் கலந்திருப்பது சிங்கள குருதிதான். அங்கு குருதி தேவைப்படும் போது இராணுவத்தினரே அதனை
வழங்குகின்றனர்.

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார். இதற்கு முன்னரும் இதே கருத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

புங்குடுதீவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் அதனை மீளவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தலைவர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராசா, விக்னேஸ்வரன், சுமந்திரன் மற்றும் நீதிபதி இளஞ்செழியன் ஆகியோரின் பாதுகாப்புக்கு சிங்களப் பொலிஸாரே அமர் த்தப்பட்டுள்ளார்கள்.

அவர்களால் ஏன் தமிழ் பொலிஸாரை பாதுகாப்புக்கு அமர்த்த முடியாது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கலந்து கொண்டார். அதில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றே விரும்புகின்றனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மகன் யாரைத் திருமணம் முடித்தார்.

சிங்களத் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் மகளையே அவர் திருமணம் முடித்தார். நாட்டின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மனைவி தமிழ்ப் பெண்.

மகிந்த ராஜபக்ஷவின் தங்கையை முடித்தவர் தமிழர் நடேசன். அதனால்தான் சொன்னேன், மகிந்த ராஜபக்ஷ உங்களுடைய மச்சான் என்று.

வெள்ளவத்தையில் சென்று பாருங்கள், அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கோயில்களைக் கட்ட முடியும்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் வேல் எடுத்து வரும் போது இராணுவத்தினரே அங்கு உள்ளனர்.

தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்கு இந்து தெய்வ விக்கிரகங்களே உள்ளன. புத்தரும் இந்துக் கடவுளும் அமைதியாக ஒற்றுமையாக உள்ள போது, அவற்றை வழிபடும் மக்களே சண்டை பிடிக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!