நிதி தொடர்பான பிரேரணைகளை எதிர்க்கட்சி முன்வைக்க முடியாது – தினேஸ் போர்க்கொடி

நிதி தொடர்பான பிரேரணைகளை அரசாங்கத் தரப்பே நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்று அவைத் தலைவரான அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும், பிரேரணை ஒன்றை நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஐதேகவினர் முன்வைத்தனர். அத்துடன், இந்தப் பிரேரணை சபாநாயகரிடமும் கையளிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தினேஸ் குணவர்த்தன,

“எதிர்க்கட்சியினர் இந்தப் பிரேரணையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதனை பிரதி சபாநாயகரிடம் எழுத்துமூலமே சமர்ப்பிக்க முடிந்தது.

அவர் அதனை நேற்று விவாதத்துக்கு எடுக்க முடியாது என்று கூறி விட்டார். நிலையியல் கட்டளைகளின் படி, இதனை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்க 5 நாட்கள் தேவை என்று அவர் கூறினார்.

எனினும், நிதி தொடர்பான பிரேரணைகள் எதிர்க்கட்சியால் முன்வைக்க முடியாது. அரசாங்கமே அதனை முன்வைக்க முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!