ஞானசார தேரரின் விடுதலை – மைத்திரி கொடுத்துள்ள வாக்குறுதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவினரை, விடுவிப்பது குறித்து சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறும், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவினரை விடுவிக்குமாறும் கோரி, சிங்களயே அபி என்ற அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் நேற்று அதிபர் செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் மீது சிறிலங்கா காவல்துறையினர் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, அரச தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, அந்த அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குகளை சிறிலங்கா அதிபரிடம் அழைத்துச் சென்று சந்திக்க ஏற்பாடு செய்தார்.

இதன்போதே, அவர் தனக்கு பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியது பற்றித் தெரியாது என்றும், தனக்கு அதிகாரிகள் கூறவில்லை என்றும் தெரிவித்த சிறிலங்கா அதிபர், பிக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வருத்தம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், ஞானசார தேரர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை விடுதலை செய்வது குறித்து, சட்டமா அதிபருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!