நிசாந்த சில்வாவின் இடமாற்றம் ரத்து – தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய காவல்துறை ஆணைக்குழு ரத்துச் செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை மா அதிபரின் பணியக அறிக்கைகளை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வா, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், நீர்கொழும்பு காவல்துறை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

சிறிலங்கா காவல்துறை மா அதிபரே இந்த இடமாற்றத்தை அறிவித்திருந்தார்.

இது, அரசியல் மற்றும், மனித உரிமை அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர் படுகொலைகள், மற்றும் கீத் நொயார், உபாலி தென்னக்கோன், நாமல் பெரேரா உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதுான தாக்குதல்கள், கொழும்பில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான அவன்ட் கார்ட் வழக்கு, ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ள வசீம் தாஜூதீன் கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் விசாரணை அதிகாரியாக செயற்பட்ட நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னால் பாரிய அரசியல் சதி இருப்பதாக கருதப்படுகிறது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை குறித்தும் இவரே புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுத்திருந்தார்.

இவரது இடமாற்றம், முன்னைய ஆட்சிக்கால குற்றங்கள் குறித்த விசாரணைகளை நிறுத்தும் நோக்கம் கொண்டது என்று நம்பப்படுகிறது.

இந்த இடமாற்றம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் சங்கம், விசாரணைகளை நிறுத்தும் நோக்கிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று கவலை வெளியிட்டுள்ளதுடன், இதற்கும் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிசாந்த சில்வாவிடம் கையளிக்கப்பட்ட விசாரணைகளை நிறுத்தும் நோக்கிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்குப் பின்னால் பாரிய அரசியல் நோக்கம் இருப்பதாகவும், ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பின் அமைப்பாளர் ஜே.சி.வெலியமுன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது, மற்றும் காணாமல் ஆக்கப்பட்டது உள்ளிட்ட மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரித்த நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டமை, இந்த விசாரணைகளில் அரசாங்கத்தின் தலையீட்டை காட்டுவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கு விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!