பாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்- பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ள பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் பொதுமக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்னின் வடபகுதியில் உள்ள புறநகர் பகுதியை சேர்ந்த இவர்களை கடந்த மார்ச் மாதம் முதல் கண்காணித்து வந்த நிலையிலேயே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் சகோதாராகள்( 30.26.21) என தெரிவித்துள்ள பொலிஸார் இவர்கள் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

17000 தொலைபேசி அழைப்புகளையும் 10,000 குறுஞ்செய்திகளையும் இடைமறித்து கேட்டபின்னர் இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட முயல்கின்றனர் என்பதை உறுதி செய்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூவரினதும் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை அவதானித்த பின்னர் இன்று காலை அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் நிச்சயமாக ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டிருந்தனர் எனினும் தாங்கள் தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய இடத்தினை அவர்கள் இன்னமும் தீர்மானிக்காத நிலையிலிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூவரும் துருக்கி வம்சாவளியினர் ஆனால் அவுஸ்திரேலிய பிரஜைகள் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் கடந்த வாரம் இவர்கள் தாக்குதலை மேற்கொள்வதற்காக துப்பாக்கிகளை பெற முயற்சித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!