பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்- சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

மத்திய மந்திரியும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கூறியுள்ளார்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்தார்.

‘தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட வேண்டுமா என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். ஆனால், நான் அடுத்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இது தொடர்பாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்திவிட்டேன்’ என்றார் சுஷ்மா.

உடல்நலக் குறைவு காரணமாக சுஷ்மா தேர்தல் அரசியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுஷ்மா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக தொகுதிப்பக்கம் வரவில்லை எனக் கூறி சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேள்வி எழுப்பியதால், அவர் தனது முடிவை அறிவித்திருக்கிறார்.

சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆகலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த சுஷ்மாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு சிறுநீரகம் செயலிழந்ததையடுத்து, அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று ஆபரேசன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!