பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு, சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடவுள்ளது.

இன்றைய அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக, காலை 9 மணிக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகரின் செயலகம் அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படுவதுடன், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கான உறுப்பினர்களின் நியமனம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

அனுமதி மறுப்பு

அதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போதும், பொதுமக்கள் மற்றும் விருந்தினர்களுக்கான பார்வையாளர் மாடம், மூடப்பட்டிருக்கும் என்று படைக்கல சேவிதர் அறிவித்துள்ளார்.

தெரிவுக்குழு

இந்த நிலையில் 12 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி என்பன முன்மொழிந்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில், தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மகிந்த சமரசிங்க, எஸ்.பி.திசநாயக்க, நிமலட் சிறிபால டி சில்வா, திலங்க சுமதிபால ஆகிய 7 பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

ஐதேக சார்பில், சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியெல்ல ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், ஜேவிபி சார்பில் விஜித ஹேரத், நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோரும், தெரிவுக்குழுவுக்காக முன்மொழியப்பட்டுள்ளனர்.

சர்ச்சை வெடிக்கும்?

தெரிவுக்குழுவில் 12 உறுப்பினர்களே நியமிக்கப்படும் நிலையில், நான்கு கட்சிகளும், 16 பேரின் பெயர்களை முன்மொழிந்திருக்கின்றன. இதில், எத்தனை உறுப்பினர்களை நியமிப்பது என்ற விடயத்தில் இன்று குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

இறுதி முடிவு

தாமே ஆளும்கட்சி என்றும், நாடாளுமன்றத்தில், தமக்து 103 ஆசனங்களும், ஐதேகவுக்கு 101 ஆசனங்களும் இருப்பதால், தமக்கு 7இடங்கள் தரப்பட வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் மகிந்த சமரசிங்க கோரியுள்ள நிலையில்- நாடாளுமன்ற நடைமுறைகளின் அடிப்படையில், தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களை சபாநாயகரே முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!