20 ஆண்டுக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்: – புதிய ஆய்வில் தகவல்

புதிதாக திருமணமான தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் இது தவறான தகவல். திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வு அமெரிக்காவில் எடுக்கப்பட்டு உள்ளது. பென்சில்வேனியா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரிகாம் இளைஞர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

திருமணமான 2034 தம்பதிகளை தேர்வு செய்து அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களின் பெண்கள் சராசரி வயது 35 கொண்டவர்களாகவும், ஆண்கள் சராசரி வயது 37 கொண்டவர்களாகவும் இருந்தனர். கணவன்-மனைவி இருவரும் திருமணமாகி எந்த காலக்கட்டத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

அவர்கள் அளித்த பதில்களை வைத்து பார்க்கும் போது திருமணமான தொடக்க ஆண்டுகளை விட பிந்தைய காலத்தில் தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாக இருந்ததாக தெரியவந்தது. திருமணம் ஆனதும் ஆரம்பத்தில் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றதாகவும், பின்னர் படிப்படியாக அது குறைந்து விட்டதாகவும் பலரும் கூறினார்கள்.

ஆனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாம்பத்திய வாழ்க்கையின் ஆர்வம் மேலும் அதிகரித்து கணவன்- மனைவி இருவரும் மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தனர். இதன்படி பார்க்கும் போது கணவன்-மனைவிக்கு இடையே தாம்பத்திய வாழ்க்கையின் ஆர்வம் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு தான் அதிகரிக்கிறது. குறிப்பாக திருமணம் ஆகி 20 ஆண்டு காலவாக்கில் கணவன் -மனைவி விவகாரத்து ஆவது அதிகமாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகும் சேர்ந்து வாழும் தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!