‘அரசியலமைப்புக்கு அமையவே செயற்படுகிறேன்’ – கொமன்வெல்த் செயலரிடம் மைத்திரி

அரசியலமைப்புக்கு அமையவே தான் செயற்படுவதாகவும், ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும், கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் பரோனஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட்டிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக, கொமன்வெல்த் பொதுச்செயலருக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையில் தொலைபேசி மூலமான உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை பின்பற்றுமாறும், எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாகவும், பெயர் அழைத்து அல்லது இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் வாக்கெடுப்பை நடத்துமாறும், சபாநாயகரிடம் தெளிவாக கூறியுள்ளதாகவும், கொமன்வெல்த் செயலரிடம் சிறிலங்கா அதிபர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது, கொமன்வெல்த் அமைப்பு சிறிலங்காவுடன் ஒத்துழைத்துச் செயற்படும் என்றும், தற்போதைய அரசியல் நெருக்கடிகளை சிறிலங்கா சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ளும் என்று நம்புவதாகவும், கொமன்வெல்த் செயலர் கூறினார் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!