நிறை­வேற்று ஆட்சிமுறை ஒழிந்து போகட்­டும்

நிறை­வேற்று அதி­கா­ரங்­கள் கொண்ட அரச தலை­வர் முறை­மையை நீக்­கி­னால் அது நாட்டை அழி­வுப் பாதைக்கு இட்­டுச் செல்­லும், அரச தலை­வ­ரின் அதி­கா­ரங்­களை இன்­னும் பலப்­ப­டுத்த வேண்­டுமே தவிர குறைக்­கக்­கூ­டாது என்று கூறி நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை பற்­றிய விவா­தத்தை மீண்­டும் கிளறி விட்­டி­ருக்­கி­றார் முன்­னாள் நீதி அமைச்­ச­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜ­ய­தாச ராஜ­பக்ச.

நிறை­வேற்று அரச தலை­வர் முறை­யி­னால் இலங்கை கடந்த 40 வரு­டங்­க­ளாக அனு­ப­வித்த துன்­பங்­க­ளைத் தொடர்ந்தே அந்த முறையை முற்­றாக ஒழிக்­க­வேண்­டும் என்­கிற குரல் ஓங்கி ஒலிக்­கத் தொடங்­கி­யது.

கடந்த சுமார் 20 வரு­டங்­க­ளா­கவே இந்­தக் குரல் உறு­தி­யாக ஒலித்து வரு­கின்­றது. நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மையை ஒழிப்­பேன் என்­று­கூ­றித்­தான் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­ண­துங்க 1994ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­தார். அத­னைப் பின்­னர் அவர் செய்­ய­வில்லை என்­பது வேறு­வி­ட­யம்.

அவர் இரண்டு தட­வை­கள் பத­வி­யில் இருந்­து­விட்­டுப் போக, பின்­னர் வந்த மகிந்த ராஜ­பக்­ச­வும் அதை­யே­தான் கூறிப் பத­வி­யைப் பிடித்­தார். இப்­போது ஆட்­சி­யில் இருக்­கும் மைத்­தி­ரி­யும் அதை­யே­தான் கூறி­னார்.
நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­யால் சிங்­கள மக்­க­ளுக்­குப் பாதிப்பு அதி­கம் என்­கிற ஒரு நிலை உண­ரப்­பட்­ட­போது, அதனை இல்­லாது செய்­வ­தில் தெற்கு அர­சி­யல் கட்­சி­கள் முனைப்­போடு நின்­றன.

அரச தலை­வர் பத­விக்­குப் போட்­டி­யிட்­ட­வர்­கள் அந்த முனைப்பை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொண்டு பத­விக்கு வந்­த­னர். ஆனால் அதன் பின்­னர் தமது வாக்­கு­று­திப்­படி அதி­கா­ரத்­தைக் குறைப்­ப­தற்கு அவர்­கள் முன்­வ­ர­வில்லை.

2015ஆம் ஆண்டு கூட்டு அரசு ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஒப்­பந்­தம் ஏற்­பட்­ட­போ­து­தான், அடுத்த தடவை அரச தலை­வ­ரா­வ­தற்­கான திட்­டம் ஏதும் இல்லை என்று அறி­வித்த மைத்­தி­ரி­பால சிறி­சேன மூலம் அரச தலை­வ­ரின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை வெட்­டிக் குறைப்­பது சாத்­தி­ய­மா­னது.

ஆனால், இப்­போது நிலமை அப்­ப­டியே தலை­கீ­ழாக மாறி­யி­ருக்­கி­றது.
நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறைமை தொட­ர­வேண்­டும் என்­கிற குரல்­கள் வலுப்­ப­தைக் காண முடி­கின்­றது. அது­வும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான பலம், நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மையே என்ற எண்­ணத்­தைச் சிங்­கள மக்­க­ளி­டம் விதைத்து அதற்­கூ­டா­கத் தாம் நன்­மை­ய­டை­யும் இன­வா­தப் போக்­கை­யும் பார்க்க முடி­கி­றது.

வடக்கு -கிழக்கு மாகா­ணத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வ­ரான வர­த­ரா­ஜப் பெரு­மாள் இந்­தி­யா­விற்­குத் தப்­பிச் செல்­வ­தற்கு முன்­பாக தமி­ழீ­ழத் தனி­நாட்டு அறி­விப்­பைச் செய்­த­போது நாட்­டைப் பாது­காத்­தது நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மை­தான் என்று முன்­னாள் அமைச்­சர் விமல் வீர­வன்ச தெரி­வித்­தி­ருப்­பது இதற்­கொரு உதா­ர­ணம். நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மையை ஒழிப்­பது தமி­ழர்­க­ளுக்­குத் தனி­நாடு கொடுப்­ப­தற்கு ஏது­வா­கி­வி­டும் என்று அப்­பா­விச் சிங்­கள மக்­க­ளுக்­குப் பயங்­காட்­டப்­பார்க்­கி­றார்­கள்.

உண்­மை­யில் அரச தலை­வர் அதி­கா­ரங்­கள் தொடர்­பாக ஏற்­பட்­டி­ருக்­கும் இந்த விவா­தத்­திற்­கும், தமி­ழர்­க­ளின் தனி­நாட்­டுக் கோரிக்­கைக்­கும் தொடர்பு ஏதும் இல்லை. ஐக்­கிய தேசி­யக் கட்சி, -சுதந்­தி­ரக் கட்சி அதி­கா­ரப் போட்­டியே தற்­போ­தைய எல்­லாப் பிரச்­சி­னைக்­கும் கார­ணம் என்று தெரி­விக்­கும் ஜே.வி.பி, அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தத்­தின் மூலம் குறைக்­கப்­பட்­டது போக , அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வி­டம் எஞ்­சி­யி­ருக்­கும் அதி­கா­ரங்­க­ளை­யும் பறித்­து­வி­டும் நோக்­கோடு அர­ச­மைப்­புத் திருத்­தம் ஒன்­றைக் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சிக்­கி­றது என்­பதே உண்மை.

அத்­த­கைய ஒரு திருத்­தத்தை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், கூட்டு எதி­ர­ணி­யும்­கூட ஆத­ரிக்­கும் என்­கிற தக­வல்­க­ளை­யும் கசி­ய­விட்டு, அதை­யொரு சர்ச்­சை­யாக்கி தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கச் சிங்­கள மக்­க­ளைத் தூண்­டி­வி­டு­வ­தில் சிங்­க­ளப் பேரி­ன­வா­தம் மிகக் கூர்­மை­யோடு செயற்­பட்­டுக்­கொண்­டி­ருப்­பது தெளி­வா­கவே தெரி­கி­றது.

எது எப்­ப­டி­யி­ருந்­தா­லும், இந்­தச் சவாலை எதிர்­கொண்டு, நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறையை முற்­றாக ஒழித்து நாடா­ளு­மன்­றத்­தைப் பலப்­ப­டுத்­து­வ­தும், நாடா­ளு­மன்­றத்­துக்கு ஊடா­கவே நாட்டை முழு­மை­யாக நிர்­வ­கிப்­ப­தும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வதை தமி­ழர் தரப்பு ஆத­ரிப்­பதே தமி­ழர்­க­ளின் எதிர்­கா­லத்­திற்கு நல்­லது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!