மாயமான மலேஷிய விமான விவகாரம் : வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா

மாயமான மலேஷிய விமானம் எம்.எச்.370 தொடர்பாக போயிங், மலேஷியா ஏர்லைன்ஸ் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மலேஷியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான எம்.எச்.370, மலேஷியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டது. அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்தனர். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அது ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.

விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் எந்த பகுதியில் விழுந்தது? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. என்ன நடந்தது? என்பதற்கு விசாரணக்குழுவின் அறிக்கையிலும் தெளிவான பதில் இல்லை. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மலேஷிய விமானம் மாயமானது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலேஷிய விமான விபத்திற்கு மலேஷியா ஏர்லைன்ஸ், போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் எஸ்இ ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

குறித்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேக்சன், வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

மலேஷிய விமான நிலையத்தில் இருந்து மலேஷியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட விமானம் மாயமானது தொடர்பான வழக்கு என்பதால் அமெரிக்காவில் விசாரிப்பது பொருத்தமற்றது என நீதிபதி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!