அரசியல் பற்றி எதுவுமே தெரியாத என் தாயாரை விமர்சிப்பதா? – மோடி ஆவேசம்

அரசியல் ரீதியாக என்னுடன் மோத பலமில்லாத காங்கிரசார் அரசியல் பற்றி எதுவுமே தெரியாத தனது தாயாரை விமர்சிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடைந்துவரும் வீழ்ச்சி தொடர்பாக சமீபத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார், அமெரிக்க டாலரின் உயர்வை மோடியின் தாயார் வயதுபோல் டாலரின் விலையும் கூடிக்கொண்டே போகிறது என்று சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சத்தர்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பேசிய மோடி கூறியதாவது:-

கடந்த 17,18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நான் வெற்றிகரமாக போரிட்டு வருகிறேன். என்னை எதிர்த்து போராட சக்தியற்ற காங்கிரஸ் பிரமுகர்கள் இன்று மிகவும் கீழ்த்தரமாக சென்று எனது தாயாரை அரசியலுக்கு இழுக்கின்றனர்.

என்னோடு போட்டிப் போட்டு வெல்ல முடியாது என்பதால் அரசியல் பற்றி எதுவுமே தெரியாத என் தாயாரை இப்போது வம்புக்கு இழுக்கிறார்கள்.

எனது தாயாரின் பெயரை இழுப்பதால் மட்டும் இந்த தேர்தலில் டெபாசிட் பறிபோகும் அளவுக்கு நீங்கள் அடையவிருக்கும் தோல்வியில் இருந்து தப்ப முடியாது.

இங்கு நடைபெறும் சிறிய உள்ளாட்சி தேர்தலில்கூட இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனத்தை யாரும் முன்வைக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி தருமாறு அனைத்து தாய்மார்களையும், சகோதரிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

என்னை மட்டுமில்லாமல் மத்தியப்பிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானைகூட மாமா என்று விமர்சித்து கிண்டல் செய்கிறார்கள். உங்கள் தாய்வழி மாமாக்கள் ஓட்டாவியோ கோத்ரோச்சி (போபர்ஸ் ஊழல்) மாமாவையும், வார்ரென் ஆன்டர்சன் (போபால் விஷவாயு விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்) மாமாவையும் நீங்கள் ஏன் நினைப்பதில்லை?

எனது அரசில் 125 கோடி மக்களும் எஜமானர்கள். ஒரு மேடம் (சோனியா) கையில் உள்ள ரிமோட் கன்ட்ரோலால் இந்த ஆட்சி நடக்கவில்லை. மேடம் தலைமையிலான கட்சியின் ஆட்சி நடந்தபோது பணக்காரர்களுக்காக வங்கி கஜானாக்கள் காலி செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆட்சியில் தேவையில் உள்ள இளைஞர்களுக்காக வங்கி கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!