பொதுவேட்பாளராக களமிறங்கும் கனவில் சபாநாயகர்! – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கும் கனவில் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தையும் நாட்டையும் குழப்பியடித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சபாநாயகர், ஐ.தே.கவின் நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருவதன் மூலம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க பொது வேட்பாளராக களமிறங்குவதே அவரது கனவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சபாநாயகரின் மருமகனான நவீன் திசாநாயக்க எம்.பி ஊடகங்களில் அதனை உறுதி செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதியின் அறிவிப்பை முதல் இரண்டு நாட்களும் ஏற்றுக் கொண்ட சபாநாயகர் பின்னர் வெளிநாட்டு தூதுவர்களின் அறிவுரைகளைக் கேட்டே அதனை மறுக்க ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க தயாரென்றால் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத் தேர்தலை நடத்த நாம் தயாராகவுள்ளோம். ஜனாதிபதியின் தீர்மானத்தின் சரி, பிழையை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கே உள்ளது. ஆனால் ஐ.தே.க மக்களிடம் சென்று வாக்கு கோருவதற்கு அஞ்சி தேர்தலுக்கு பின்வாங்குகின்றது.

தெரிவுக்குழுவை நியமிக்கும் பொருட்டே பாராளுமன்றம் இன்று கூடியது. தெரிவுக்குழுவில் ஆளும் கட்சிக்கே பெரும்பான்மையளிக்கப்படுவது வழமை. அதற்கமைய 12 உறுப்பினர்களில் 07 பேர் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மிகுதி 05 பேரும் எதிர்க்கட்சியிலிருந்து தெரிவாக வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பிரதமரை தெரிவு செய்யும்போது ஐ.தே.க வுக்கு 41 உறுப்பினர்களே இருந்தனர். அப்படியிருந்தும் சபாநாயகர் ஐ.தே.க வுக்கே 07 பெரும்பான்மையை வழங்கினார். ஆனால் இன்று அவர் அரசாங்கம் சார்பில் 07 பேரையும் எதிர்க்கட்சி சார்பில் 05 பேரையும் நியமித்துள்ளார்.

தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே நாம் பாராளுமன்றத்திலிருந்து எழும்பிச் சென்றோம். தெரிவுக்குழுவுக்கு வாக்கெடுக்கும் பொழுது சபாநாயகர் என்றுமில்லாதவாறு அதிக நேரத்தை எடுக்கப் பார்த்தார்.

இது தெரிவுக்குழுவுக்கான வாக்கெடுப்பு மட்டுமேயாகும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 பேரும் ஜே.வி.பியின் 06 பேரும் உள்ளனர். அந்த வாக்குகளை குறைத்து மதிப்பிட்டால் உண்மையான நிலையை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!