ரணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – என் வாழ்நாளில் அது ஒருபோதும் நடக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

கொழும்பில் உள்ள தனது வதிவிடத்தில் நேற்று வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாழ்நாளில் நடக்காது

நான் கூறிய வழிமுறைகளின் படி, நாடாளுமன்றத்தில் (வியாழக்கிழமை) பெரும்பான்மையை நிரூபித்தால், அதனை ஏற்றுக் கொள்வேன்.

பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவை பரிந்துரை செய்யக் கூடாது என்று நான் அவர்களுக்கு மிகத் தெளிவாக கூறியுள்ளேன்.

ரணில் விக்கிரமசிங்கவை எனது வாழ்நாளில் ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன்.

பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயங்களின்படியும் கூட நான் விரும்பும் ஒருவரையே பிரதமராக நியமிக்க முடியும்.

அவர், எனக்கு விருப்பமான ஒருவராக இருக்க வேண்டும். என்னுடன் இணைந்து பணியாற்றக் கூடியவராக இருக்க வேண்டும்.

வேறு எவரையும் நியமிக்கத் தயார்

நம்பிக்கையில்லா பிரேரணை முறைப்படி நிறைவேற்றப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்க அல்லது சரத் பொன்சேகா தவிர்ந்த வேறு எவரையும், பிரதமர் பதவிக்கு ஐதேமு பரிந்துரைக்கலாம்.

பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ ஐதேக முன்மொழிந்தால் அவர்கள் இருவரையும் நான் நிராகரிப்பேன்.

என்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால் இருப்பவர் என்று குற்றம்சாட்டப்படும் ஒருவரை நான் பிரதமராக நியமிக்கமாட்டேன்.

அதுபோலவே, ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தி, தேசிய சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்றார்.

பதவி விலகுமாறு கோரினேன்

கடந்த பெப்ரவரி 10 உள்ளூராட்சித் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்த பின்னர், இதே அறையில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கேட்டேன்.

அவரது கொள்கைகளால் தான் நாங்கள் தேர்தலில் தோல்வியடைந்தோம்.

அதற்குப் பின்னர் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு பிரதமர் பதவியை வழங்க முன்வந்தேன். அவர் மறுத்து விட்டார். அதன் பின்னர் சஜித் பிரேமதாசவை அணுகினேன்.

அவர்கள் இருவரும் மறுத்த பின்னர் தான், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தேன். அங்கே வேறு யாரும் இல்லை.

மகிந்த முற்போக்காளர்

மகிந்த ராஜபக்ச முற்போக்கான சிந்தனை கொண்டவர். எதிர்காலம் பற்றிய கரிசனையுள்ளவர்.

பெரும்பாலான சிறிலங்கா அரசியல்வாதிகள் மோசடி மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

ஆனால், தற்போதைய நாடாளுமன்றத்தில், யார் தேசிய நலன்கள் பற்றி சிந்திக்கிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை விட வேறு வழியில்லை.

ஒரு வாரத்திலேயே தொடங்கிய மோதல்

2015 ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்ற ஒரு வாரத்தில், அமைச்சரவையை தெரிவு செய்வதற்காக அமர்ந்த போதே ரணில் விக்கிரமசிங்கவுடனான மோதல் ஆரம்பித்து விட்டது.

அமைச்சரவை முன்மொழிவில் விஞ்ஞான முறையை பின்பற்றவில்லை. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கள் இணைக்கப்பட்டன. நிதியமைச்சின் கண்காணிப்பில் இருந்து வங்கிகள் நீக்கப்பட்டன. இதுவே மத்திய வங்கி பிணை முறி மோசடி உள்ளிட்ட வற்றுக்கு வழி வகுத்தது.

இது பெரிய பிரச்சினையல்ல

தற்போதைய அரசியல் நெருக்கடிகளை ஒரு இடையூறாகவே பார்க்கிறேனே தவிர, பெரிய பிரச்சினையாக கருதவில்லை. நாடாளுமன்றம் முறையாகச் செயற்பட்டால் பிரச்சினையைத் தீர்த்து விட முடியும்.

அரசியலமைப்புக்கு அமையவே நடவடிக்கை

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது, நாடாளுமன்றத்தைக் கலைத்தது- இந்த மூன்று எனது நடவடிக்கைகளுமே அரசியலமைப்புக்கு உட்பட்டவை தான்.

நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று எனது சட்டவாளர்கள் ஆலோசனை கூறினர்.

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக, அரசியலமைப்பில் மூன்று பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றில் மாத்திரமே, நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னரே கலைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றை நாடவில்லை

நாடாளுமன்றத்தைக் கலைப்பது எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் என்பது சட்டவல்லுனர்களின் கருத்தாக இருந்ததால், நான் உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிய முற்படவில்லை.

ரணில் அரசாங்க மோசடிகள் குறித்து விசாரணை

ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் பரந்தளவில் இருந்த பாரிய மோசடிகள், ஊழல்கள் குறித்து விசாரிக்க அதிபர் ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளேன்.

ஒக்ரோபர் 26ஆம் நாள் இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டது வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள் குறித்து விசாரிக்கும் தனியான ஆணைக்குழு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன்.

மத்திய வங்கி மோசடி உள்ளிட்ட மோசடிகளில் ஆதாரங்களை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன்.

நான் பொறுப்பில்லை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடங்கியிருப்பதற்கு நான் பொறுப்பல்ல.

ரணில் விக்கிரமசிங்கவும், சாகல ரத்நாயக்கவும் தான், அந்த விசாரணைகளில் ஏற்பட்ட தாமதங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

கூட்டு அரசாங்க உடன்பாட்டை மதித்து, ஐதேக அமைச்சர்களின் கீழ் உள்ள துறைகளில் நான் தலையீடு செய்யவில்லை.

நீதிமன்றங்கள், காவல்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களம் எல்லாமே அவர்களிடம் இருந்த அமைச்சுக்களின் கீழ் தான் இருந்தன.

விசாரணைகளில் ஏற்பட்ட தாமதங்களுக்கு அவர்கள் தான் பொறுப்பு.

விசாரணைகள் நிறுத்தப்படாது

அமைச்சரவையில் அவர்களில் பலர், இடம்பெற்றிருந்தாலும், ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.

ஊழல் அரசியல்வாதிகளை தவிர்ப்பது கடினம்

தொங்கு நாடாளுமன்றத்தில் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் போது, ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசியல்வாதிகளை தவிர்ப்பது கடினமானது. எங்கே, ஊழல் வழக்கு இல்லாத ஒரு அரசியல்வாதியைக் காட்டுங்கள்?

நீங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது அனைத்துக் கட்சிகளையும் சுட்டிக் காட்டலாம். நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை இல்லை என்பதே பிரச்சினை.

நீங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்தால்,அரசியல் கூட்டணி சாத்தியமற்றது. கடந்த காலம் நமக்கு பின்னால் இருக்கிறது. இது ஒரு புதிய தொடக்கம், ஒரு புதிய திட்டம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!