காவல்துறை மா அதிபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் 4 மணிநேரம் விசாரணை

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக விசாரித்து வரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரே, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்காக நேற்றுக்காலை 9 மணியளவில், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்ற காவல்துறை மா அதிபர் பிற்பகல் 1 மணியளவில் விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய தாம் விசாரணைக்கு முன்னிலையானதாகவும், தம்மிடம் மூன்று மணி நேரத்துக்கு மேலாக கேள்விகள் எழுப்பப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

”விசாரணைகளின் ஒரு பகுதியாக எனது வாக்குமூலம் பெறப்பட்டது, இது இன்னும் முடியவில்லை. எனது முழுமையான வாக்குமூலத்தை பெறுவதற்காக மீண்டும் அழைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன.” என்று அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நாலக சில்வா தொடர்பாகவும், இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாகவும், பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு சிறப்பு அதிரடிப்படையின் பயிற்சி பெற்ற சிறப்பு நடவடிக்கை குழுவொன்றை உருவாக்க அனுமதி கோரப்பட்டது குறித்தும் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!