கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மு. க. ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது- ஐ.பெரியசாமி

தி.மு.க.வில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான மு. க. ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என்று கட்சியின் துணை பொதுசெயலாளரான ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ மக்களவை தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைந்ததும் சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவோம். தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.கவைத் தவிர மக்கள் நலனுக்காக அனைத்து கட்சிகளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளன.

தற்போது கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மாநில அளவில் தற்போது கூட்டணி குறித்து பேசவேண்டிய நிலையும் இல்லை. தேசிய அளவிலான கூட்டணி குறித்தே பேசப்பட்டு வருகிறது.

கூட்டணி குறித்து தி.மு.க. பொருளாளார் துரைமுருகன் கூறிய கருத்தை முழுமையாக அறியவேண்டும். ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இல்லை என்றோ, அவர்களை கூட்டணியில் சேர்க்கமாட்டோம் என்றோ அவர் கூறவில்லை.

தமிழகத்தில் தி.மு.க.வுடன் நட்புறவுடன் உள்ள கட்சிகள் நிச்சயம் கூட்டணியிலும் இடம்பெறும். கூட்டணி சம்பந்தமாக முடிவெடுக்கும் அதிகாரம் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது. மற்றவர்கள் முடிவெடுக்க இயலாது.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!