இன்றும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தது மகிந்த தரப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல்10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர்.

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின், பிரதமர் செயலகத்துக்கான நிதியைக் கட்டுப்படுத்தும், பிரேரணை மீது இன்று விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும், அரசதரப்பு பங்கேற்கவில்லை.

பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை கட்டுப்படுத்துவது சட்டபூர்வமானதல்ல என்பதால், இது குறித்து விவாதிக்கும் இன்றைய அமர்வை புறக்கணிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

எனினும், ஆளும் கட்சி வரிசையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மாத்திரம் அமர்ந்துள்ளார்.

எதிர்க்கட்சி வரிசையில் அத்துரலிய ரத்தன தேரர்

அதேவேளை, அண்மையில் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவு தெரிவித்த, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!