இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கு வேட்டு வைத்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அரசாங்கத்தில் தற்போது, இராஜாங்க அமைச்சர்களோ, பிரதி அமைச்சர்களோ பதவியில் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல பங்கேற்கவில்லை.

இதுகுறித்து, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “இது இடைக்கால பராமரிப்பு அரசாங்கமே என்றும், எனவே, இராஜாங்க அமைச்சர்களோ, பிரதி அமைச்சர்களோ பதவியில் இல்லை என்றும் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்” என, அமைச்சர் மகிந்த சமரசிங்க பதிலளித்தார்.

தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே பதவியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் கடந்த 9ஆம் நாள் கலைத்த பின்னர், பராமரிப்பு அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

எனினும், சிறிலங்கா அதிபரின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!