ஜனாதிபதியை சந்தித்த ஐ.நா உயர்அதிகாரி! – தீர்வு காணுமாறு அழுத்தம்

இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு வேண்டிய முழு ஆதரவை சர்வதேச சமூகம் வழங்குமெனவும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரத் திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டாவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் தீர்வை முன்வைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதிக்கு,பணிப்பாளர் மரி யமஷிட்டா வலியுறுத்தியுள்ளார்.

குறித்த பிரச்சினையை விரைந்து தீர்ப்பதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் அதற்கு வேண்டிய முழு ஆதரவை சர்வதேச சமூகம் வழங்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு ஏற்ப தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் இதற்கு முன்னர், பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியதை தொடர்ந்தே நேற்று ஜனாதிபதியுடன் சந்திப்பில் அவர் ஈடுபட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!