விமானத்தில் கோளாறு ; ஜி -20 கூட்டத்தில் பங்கேற்க முடியாது திரும்பிய ஜேர்மன் பிரதமர்

துரதிர்ஷ்டவசமாக ஜி -20 மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் ஜேர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுக்கு பங்கேற்க முடியாது போயுள்ளது.

ஆர்ஜன்டீனாவில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே அவருக்கு இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது.

ஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார். அவருடன் அரச உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவும் சென்றது.

இதன்போது நெதர்லாந்து நாட்டு வான் பரப்பு பகுதியில் விமானம் பறக்கும்போது மின்சார சாதனங்கள் சரியாக இயங்காத காரணத்தினால் விமானி, விமானத்தை அங்கிருந்து ஜேர்மனிக்கு திருப்பி வெஸ்ட்பாலியா மாநிலத்திலுள்ள கோல்ன் நகரில் அவசரமாக தரையிறக்கினார்.

இதன் காரணமாகவே ஜி -20 மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த ஏஞ்சலா மெர்க்கலுக்கு இறுதியில் பங்கேற்க முடியாது போனது.

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பில் உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிக்கோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!