ஒல்லியாக இருந்தும் என்னுடன் மோத இத்தனை கட்சிகளா? – சந்திரசேகர ராவ் கிண்டல்

ஒல்லியாக இருந்தும் என்னுடன் மோத இத்தனை கட்சிகளா? என்று முதல்வர் சந்திரசேகர ராவ் கிண்டலாக கூறினார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தல் 7-ந்தேதி நடை பெறுவதையொட்டி அங்கு பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது.

மீண்டும் ஆட்சியை தக்க வைக்க சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ் தினமும் பலவேறு மாவட்டங்களுக்கு சென்று பேசி வருகிறார்.

நேற்று ஒரே நாளில் 7 பொதுக்கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

தெலுங்கானா தேர்தலில் என்னை எதிர்க்க பல கட்சிகள் முயன்று வருகின்றன. ஒல்லியாக இருக்கும் என்னை சமாளிக்க பா.ஜனதா, காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி உள்பட பல கட்சிகள் களத்தில் உள்ளன.

இம்மாநிலத்தில் 60 ஆண்டுகள் காங்கிரசும், 18 ஆண்டுகள் தெலுங்கு தேசமும் ஆட்சி செய்துள்ளன. ஆனால் அவர்கள் செய்யாத வளர்ச்சியை நான் 4 ஆண்டுகளில் செய்திருக்கிறேன்.

நான் சட்டசபையை கலைத்து முன்கூட்டியே தேர்தலை சந்திப்பது பற்றி விமர்சனம் செய்கிறார்கள். தேர்தலில் நான் டெபாசிட் கூட வாங்கமாட்டேன் என்று கூறியதால்தான் முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்தேன்.

காங்கிரசுக்கு எதிராக என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். ஆனால் இப்போது காங்கிரசுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி வைத்து இருக்கிறார். முன்பு அவர் சோனியா காந்தியை கமி‌ஷன் வாங்குபவர் என்றும், ராகுல் காந்தியை ஒரு குழந்தை என்றும் விமர்சனம் செய்து கடுமையாக பேசினார்.

ஆனால் தற்போது அவர்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இப்போது மட்டும் அவர்கள் நல்லவர்களாக அவருக்கு தெரிகிறார்களா?

சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தை தான்தான், உருவாக்கியதாகவும், உலக வரைபடத்தில் அதை கொண்டு வந்ததாகவும் பேசுவது பைத்தியக்கார தனமாக உள்ளது. அப்படி கூறும் அவர் ஏன் இன்னும் தலைநகர் அமராவதியை கட்டி முடிக்கவில்லை.

ராகுல்காந்தி தெலுங்கானாவில் வளர்ச்சி ஏற்படவில்லை என்று கூறுகிறார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். அவர் என்னுடன் ஒன்றாக வந்தால் தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காண்பிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!