இந்தோனேசியா சிறையில் இருந்து தப்பிச் சென்ற 36 கைதிகள் பிடிபட்டனர் – 77 பேருக்கு வலை

இந்தோனேசியா நாட்டின் சிறையில் இருந்து தப்பிச் சென்றவர்களில் 36 கைதிகளை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 77 பேரை தேடி வருகின்றனர்.

இந்தோனேசியா நாட்டின் அசே மாகாணத்தில் உள்ள பன்டா அசே பகுதியில் உள்ள மத்திய சிறையில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி மாலை 113 கைதிகள் தப்பியோடி விட்டனர்.

இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள 726 கைதிகள் கூட்டுத் தொழுகைக்காக திறந்து விடப்பட்டபோது, இந்த சந்தர்பத்தை சாதகமாக்கி, சிறையின் கம்பி வேலியை வெட்டி அவர்கள் தப்பிச் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

தப்பியோடிய கைதிகள் பிடிப்பதற்காக நாடு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தப்பிச்சென்ற கைதிகளில் இதுவரை 36 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 77 பேரை தேடி வருகின்றனர். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என அசே மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் எரி அப்ரியோனோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!